தேவையற்ற அதிகாரம்!

By ஆசிரியர்  |  Dhinamani

ஒரு விசித்திரமான கோரிக்கையுடன் உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். இது குறித்து கண்டனம் தெரிவிக்க வேண்டிய அரசியல் கட்சிகளும் விவாதத்துக்கு உட்படுத்த வேண்டிய ஊடகங்களும் மெளனம் சாதிப்பதுதான் வியப்பளிக்கிறது.

தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனுவில் தனக்கு அரசியல் கட்சிகளைப் பதிவு செய்யும் உரிமை இருப்பதுபோல, அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யும் உரிமையும் தரப்பட வேண்டும் என்று கோருகிறது. இதன் மூலம் குற்றப்பின்னணி உள்ளவர்கள் அரசியல் கட்சி தொடங்குவதையோ, அந்தக் கட்சி தேர்தலில் போட்டியிடுவதையோ தடுக்க முடியும் என்பதால் அந்த அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு தரப்பட வேண்டும் என்பதுதான் கோரிக்கை. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஊழல் வழக்குகளில் சிக்கி வரும் நிலையில், தேர்தல் ஆணையத்திற்கு இப்படியொரு அதிகாரம் இருந்தால்கூட தவறில்லை என்கிற கருத்து மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் எழக்கூடும்.

இந்தியாவில் வாக்குரிமை உள்ள யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம் என்பதால், நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் போல, கணக்கிலடங்காத அரசியல் கட்சிகள் காணப்படுகின்றன. இவற்றில் பல அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதே இல்லை. அப்படியே போட்டியிட்டாலும் சில நூறு வாக்குகள் மட்டுமே பெறும் அளவில்தான் செல்வாக்குப் பெற்றிருக்கின்றன. சில கட்சிகள் அரசியல் பேரம் பேசுவதற்காகவும், கட்சியின் பெயரால் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதற்காகவும் உருவாக்கப்படுகின்றன. சில கட்சிகள் கருப்புப் பணச் சலவைக்கு மட்டுமே உருவாக்கப்படும் அவலமும் காணப்படுகிறது. இப்படிப்பட்ட கட்சிகள் எதுவுமே மக்கள் ஆதரவைப் பெறுவதில்லை என்பதையும், தேர்தலில் வைப்புத் தொகையை இழப்பதுதான் மிச்சம் என்பதையும் நாம் உணர வேண்டும். ஆரோக்கியமான ஜனநாயகத்தில் அரசியல் இயக்கங்கள் உருவாவதை சட்டத்தின் மூலம் தடுப்பது என்பது சரியான அணுகுமுறை அல்ல. 

படித்த நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்றும், இரு கட்சி ஜனநாயகம்தான் ஆரோக்கியம் என்றும் ஒரு தவறான கண்ணோட்டம் பரவலாகவே காணப்படுகிறது. பல்வேறு மொழிகளும், இனங்களும், மாநிலங்களும் இணைந்த இந்தியாவைப் போன்ற ஒரு தேசத்திற்கு இரு கட்சி ஜனநாயகம் போன்ற பேராபத்து வேறொன்றும் இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக, சந்தைப் பொருளாதாரத்தின் பிடியில் உலகமே சிக்கியிருக்கும் நிலையில், ஆதாயம் கருதும் சுயநல சக்திகள் (வெஸ்டட் இன்டிரஸ்ட்ஸ்) அந்த இரண்டு கட்சிகளையும் தங்கள் கைக்குள் போட்டுக்கொண்டுவிடும் ஆபத்தை தவிர்க்க முடியாது. பாஜகவும் காங்கிரஸும் தாராளமயக் கொள்கையின் இரண்டு தண்டவாளங்களாக மாறிவிட்ட நிலையில், விஜய் மல்லையாக்களும், நீரவ் மோடிகளும் இந்திய வங்கிகளை சூறையாடுவது இதற்கு எடுத்துக்காட்டு.

அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்து உரிமை தனக்கு இல்லை என்று 1992-இல் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் கூறியிருக்கிறது. அதை உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் உறுதிப்படுத்தியிருக்கிறது. அப்படியிருக்கும்போது, இப்போது இந்த அதிகாரம் வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோர வேண்டிய அவசியமே இல்லை. 

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-இன் கீழ் அரசியல் கட்சியைத் தகுதி நீக்கம் செய்வது குறித்து எதுவும் கூறப்படவில்லை. அரசமைப்புச் சட்டத்தில், சட்டப்பிரிவு 374-இன் கீழ் அதிகாரம் பெறுகிறது தேர்தல் ஆணையம். ‘தேர்தலை நடத்துவது, கண்காணிப்பது இரண்டுமே அதன் கட்டுப்பாட்டில் அமைய வேண்டும்’ என்று மட்டுமே அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. ஒரு கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் உரிமையை தேர்தல் ஆணையத்துக்கு வழங்கவில்லை. 

அரசியல் கட்சிகள் பதிவை ரத்து செய்யும் அதிகாரம் குறித்து சட்டத்திருத்தத்தை மேற்கொள்ளும்படி கடிதம் எழுதியும் மத்திய சட்ட அமைச்சகம் பதிலளிக்கவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது. அதனால் உச்ச நீதிமன்றத்தை நாடியிருப்பதாக கூறியிருக்கிறது தேர்தல் ஆணையம். அரசியல் சாசனப்படியோ, சட்டப்படியோ உரிமையோ, அதிகாரமோ இல்லாத தேர்தல் ஆணையத்துக்கு அப்படியொரு அதிகாரத்தை வழங்க உச்ச நீதிமன்றத்துக்கு அரசமைப்புச் சட்டம் உரிமை தருகிறதா என்கிற கேள்வி எழுகிறது. 

கடந்த ஆண்டு தனது செயல்பாடுகள் குறித்து அவதூறாகப் பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தனக்கு அதிகாரம் வேண்டும் என்கிற கோரிக்கையை தேர்தல் ஆணையம் எழுப்பியது. சுதந்திர நாட்டில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளேகூட விவாதப் பொருளாகலாம் எனும்போது, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை விமர்சிக்கக் கூடாது என்கிற நியாயமற்ற, தேவையற்ற கோரிக்கைக்கு யாரும் செவிசாய்க்கவில்லை என்பதால் அந்தக் கோரிக்கை மறக்கப்பட்டுவிட்டது. இப்போது அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யும் அதிகாரம் வேண்டும் என்கிற தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையையும் அதே போலத்தான் கருத வேண்டும். 

தேர்தல் ஆணையத்தின் மரியாதையும் செயல்திறனும் கூடுதல் அதிகாரம் பெறுவதால் அதிகரித்துவிடாது. தன்னுடைய சில செயல்பாடுகளில் ஆளும்கட்சிக்கு சாதகமாகவும் ஒருதலைபட்சமாகவும் நடந்துகொண்ட பல முன்னுதாரணங்கள் இருக்கும் நிலையில், தேர்தல் ஆணையத்திற்கு அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யும் அதிகாரத்தை வழங்குவது ஆபத்தானது. 

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் மக்களின் உணர்வுகளை, தேவைகளைப் பிரதிபலிக்க அரசியல் கட்சிகள் உருவாவது தடுக்கப்படக் கூடாது. தேவையில்லை என்று கருதினால் வாக்காளர்களே அதுபோன்ற அரசியல் கட்சிகளை நிராகரித்து விடுவார்கள் என்பதை இந்திய ஜனநாயகம் பலமுறை மீண்டும் மீண்டும் நிரூபித் திருக்கிறது.
 

 
 

 

Advertisements