காந்தியை துகிலுறியும் மோடியின் இஸ்ரேல் விஜயம் 

– லதீப் பாரூக்

பலஸ்தீனர்களை கொன்றும் இன்னும் பலரை அயல்நாடுகளின் அகதி முகாம்களுக்கு அடித்து விரட்டியும் முஸ்லிம் மத்திய கிழக்கின் மையத்தில் மேற்கினால் நாட்டப்பட்ட இனவாத இஸ்ரேலுக்கு இந்தியாவின் இந்துத்துவா பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

1930, 40 களில் பிரித்தானிய காலனித்துவவாதிகளும் ஸியோனிஸ யூதர்களும் நாடற்ற யூதர்களுக்கென நாடொன்றை உருவாக்க முயற்சித்த வேளையில், அதனை எதிர்த்த இந்தியாவின் சிற்பி மகாத்மா காந்தி, எப்படி இங்கிலாந்து ஆங்கிலேயர்களுக்கும் பிரான்ஸ் பிரெஞ்சு மக்களுக்கும் சொந்தமோ அதேபோல பலஸ்தீனும் பலஸ்தீனர்களுக்குத் தான் சொந்தம் என்று கூறினார்.

அரபுகளின் எண்ணிக்கையைக் குறைத்து பலஸ்தீனை யூதர்களின் தேசமாக்குவது நிச்சயமாக  மனிதாபிமானத்துக்கு எதிரானது. இதைவிட யூதர்கள் பிறந்து வளர்ந்த இடத்திலேயே அவர்களுக்கு நீதி தேடுவதுதான் நியாயமானது என்றும் அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.

இன்றைய இந்தியாவின் தலைவர்கள் அதனை உருவாக்கிய காந்தியின் அடிச்சுவற்றில் பயணிப்பவர்கள் அல்ல. மகாத்மா காந்தியையும் அவரின் சமாதானத்துக்கான தூதையும் கொன்ற கோட்ஸேயை அங்கத்துவராகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பினையே அவர்கள் பின்பற்றுகிறார்கள். இதனால் பிரதமர் மோடியின் இஸ்ரேல் விஜயம் ஆச்சரியமானதொன்றல்ல. 1950 களிலேயே இந்தியா இஸ்ரேலுடன் உறவை ஆரம்பித்து விட்டது. ஆனால் அது முறைசாரா நிலையிலேயே இருந்தது. 1990 களில் ஆர்.எஸ்.எஸ்.-பிஜேபி அரசாங்கம் உருவானதிலிருந்து அது ஊட்டம் பெறத் தொடங்கியது.

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில், அல்லது ஸியோனிஸ்டுகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். க்கும் இடையில் உள்ள பொதுவான ஒற்றுமை இருவருமே இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் வெறுப்பவர்கள் என்பது. இருவருமே முஸ்லிம்களின் இரத்தத்தில் தோய்ந்தவர்கள் என்பது.

1940 களில் இருந்து ஸியோனிஸ்டுகள் பலஸ்தீனர்களுக்கு எதிராக 63 இனப்படுகொலைச் சம்பவங்களை நிகழ்த்தியிருக்கின்றனர். காஸாவில் இனப்படுகொலையை கட்டவிழ்த்து விட்ட நெதன்யாஹூவுக்கு பலஸ்தீனர்களைக் கொல்வது இயல்பாகிவிட்ட ஒன்று. இதுபோலவே 2002 பெப்ரவரியில் நரேந்திர மோடி குஜராத் முஸ்லிம்களை இனப்படுகொலை செய்தார். இன்று எத்தகைய வேறுபாடுமின்றி மோடியின் அரசு, பொலிஸ், சட்டம் அனைத்துமே தமது மாட்டுக் குண்டர்களால் முஸ்லிம்களைத் தாக்கிக் கொலை செய்வது மோடி அரசின் வாடிக்கையாகிவிட்டிருக்கிறது. இதனால் எட்டு தசாப்தங்களாக பலஸ்தீனர்கள் துன்புறுவது போலவே வட இந்திய முஸ்லிம்களும் அச்சமான சூழலில் வாழ்க்கையை கடத்துகிறார்கள்.modi israel 1

உலகளாவிய ரீதியில் சமூகங்களுக்கிடையே வேகமாக அழிந்து வரும் மனித விழுமியங்களைப் பாதுகாப்பதென்ற திடசங்கற்பத்துடன் பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுவதற்கு இந்த இரு நாடுகளும் வெட்கமின்றிக் கைகோர்ப்பது தான் சோகமானது. ஒரு பத்தியாளர் குறிப்பிடுகையில், இஸ்லாமிய பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையில் உறவுகள் பலப்படுவதை எதிர்கொள்வதற்காக, இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் சார்பு குழுக்களின் வழிப்படுத்தலில் இயங்கும் அமெரிக்கா, அமெரிக்க இஸ்ரேல் இந்திய உறவுகளைப் பலப்படுத்துவதில் முக்கிய பின்னணிச் சக்தியாகத் தொழிற்படுகிறது. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பதற்ற நிலைமை இருப்பது இஸ்ரேலுக்குச் சாதகமானது. அமெரிக்கா, இந்தியா, இஸ்ரேல் என்பன ஒரே அச்சில் இருப்பது இஸ்ரேலுக்கு நல்லது என்று குறிப்பிடுகிறார்.

இஸ்ரேலும் மேற்கிலுள்ள அதனுடைய பலமான லொபிகளும் 2014 தேர்தலில் மோடியினதும் பிஜேபியினதும் வெற்றியை உறுதி செய்வதற்காக உதவியது தொடர்பில் பல அறிக்கைகள் வெளியாகி உள்ளன. இஸ்ரேல் 280 கோடி ரூபா அளவில் பிஜேபியின் தேர்தல் பிரச்சாரத்துக்காக செலவழித்ததாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், சிரியா, லெபனான், எகிப்து, ஜோர்தான் மற்றும் ஈராக் நாடுகளை இணைத்து அகன்ற இஸ்ரேல் ராஜ்ஜியத்தை உருவாக்கும் நகர்வில் இஸ்ரேலினால் இரத்த ஆறாக மாற்றப்பட்டிருக்கும் மத்திய கிழக்கில் மேலும் ஒரு அழிவை மோடியின் இஸ்ரேல் விஜயம் நிச்சயம் கொண்டு வரும்.

இஸ்ரேலுக்கு விஜயம் செய்யும் நாடுகளின் தலைவர்கள் ஒரு கண்துடைப்புக்காக கால்பதிக்கின்ற இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ரமல்லாவுக்கு மோடி விஜயம் செய்யவில்லை. பலஸ்தீனர்களின் உரிமைக்காக சர்வதேச மாநாடுகளில் முன்னணியில் இருந்து குரல் கொடுத்த இந்தியா, பலஸ்தீனை கைகழுவிவிட்ட செய்தியை இதன் மூலம் அது உலகுக்குத் தெரியப்படுத்தியுள்ளது. இந்திய அரசு mahatma palபலஸ்தீனைப் புறக்கணித்தது இது முதல்தடவை அல்ல. இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இஸ்ரேலிய விஜயத்தின் போதும் அவர் ரமல்லா விஜயத்தை தவிர்த்தார். ஒடுக்கப்பட்ட பலஸ்தீனர்களை அவமதிப்பதாக இது இருந்தது.  அமெரிக்கா தலைமையிலான போர் வெறியர்களால் பிராந்தியத்தில் உருவாக்கப்பட்ட அரசியல் கொந்தளிப்பை வழிநடத்தவே இந்தியா இவ்வாறு நடந்து கொண்டது.

இன்று இந்தியாவும் இஸ்ரேலும் பொருளாதார, இராணுவ, மூலோபாய உறவுகளை வளர்த்துக் கொண்டுள்ளன. இஸ்ரேலின் இராணுவ தளபாடங்களை வாங்கும் பெரும் புள்ளியாக இன்று இந்தியா மாறியிருக்கிறது. ரஷ்யாவுக்கு அடுத்த நிலையில் இந்தியாவுக்கு பாதுகாப்பு வழங்கும் நாடாக இஸ்ரேல் இருக்கிறது. 1999 க்கும் 2009 க்கும் இடையில் இரு நாடுகளுக்கும் இடையில் 9 பில்லியன் டொலர் அளவில் இராணுவத் தளபாட வியாபாரம் நடந்திருக்கிறது. இருநாடுகளுக்கும் இடையிலான இராணுவ, மூலோபாய உறவுகள் தற்போது புலனாய்வுப் பகிர்வுகள், கூட்டு இராணுவப் பயிற்சிகள் என வளர்ந்திருக்கின்றன. இஸ்ரேலுக்கு எதிரான ஐ.நாவின் பல்வேறு பிரகடனங்களின் போது நழுவல் போக்கை கடைப்பிடித்ததன் மூலம் நரேந்திர மோடி நிர்வாகம் தனது உறவை மேலும் இறுக்கமாக்கியுள்ளது.

இது தொடர்பில் கருத்துரைத்துள்ள புதுடில்லியின் ஸஞ்ஜீவ் மிக்லானி, இஸ்ரேலின் டோவா கொஹென் ஆகிய பத்தியாளர்கள், தனது எரிபொருள் தேவைக்காக மிகவும் நம்பியிருக்கின்ற அரபு நாடுகள் மற்றும் ஈரானையும் தனது பெரிய முஸ்லிம் சிறுபான்மையையும் வருந்த வைக்கும் வகையில், மிகவும் எச்சரிக்கையாக பிராந்தியத்தில் இந்த ராஜதந்திர உறவை இந்தியா  பேணிவருகிறது என்று குறிப்பிட்டுள்ளனர். நரேந்திர மோடியின் இஸ்ரேல் விஜயம் பலஸ்தீன் மீதான ஆக்கிரமிப்பை பலப்படுத்த மட்டுமே உதவும் என முஸ்லிம் உரிமைகளுக்காக பிரதேச ரீதியில் போராடுகின்ற, இந்திய பெடரல் பாராளுமன்ற உறுப்பினர் அஸதுத்தீன் உவைஸி தெரிவித்துள்ளார். இந்தியா தற்போது பாக்கிஸ்தானையும் சீனாவையும் எதிர்கொள்வதற்கான 100 பில்லியன் டொலர் பெறுமதியான இராணுவ நவீனமயமாக்கலில் தீவிரமாக உள்ளது. ஏடுகளில் இந்தியா பலஸ்தீனின் நட்பு நாடாகவே உள்ளது. பலஸ்தீன அதிகார சபையின் அன்றி பலஸ்தீனின் தலைவரென புதுடில்லி அழைக்கும் மஹ்மூத் அப்பாஸுடனும் அது நல்லுறவைப் பேணுகிறது. ஆனாலும் கடந்த மே மாதத்தில் அவர் இந்தியாவுக்குச் செய்த விஜயத்துக்கு இந்தியா குறைந்த பெறுமானமே வழங்கியிருந்தது. அத்துடன் இருநாட்டுத் தீர்வுக்கு ஆதரவளித்து இந்தியா வெளியிட்ட பிரகடனத்திலும் கிழக்கு ஜெரூஸலத்தை பலஸ்தீனின் எதிர்காலத் தலைநகராகக் குறிப்பிடுவதையும் புதுடில்லி வசதியாக மறந்து விட்டது.

துளிர்விடும் இந்தியாவுடனான உறவில் இஸ்ரேலுக்குத் தடையாக இருப்பது இந்தியாவின் ஜனநாயகம். சீனாவில் பீஜிங் தலைமைகளால் தீர்மானம் எடுக்கப்படுவது போலன்றி இந்திய அரசியல்வாதிகள் தமது வாக்காளர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை இருக்கிறது. அத்தோடு ஆட்சிப் பலமும் கட்சியில் இருந்து கட்சிக்கு மாறுபடுகிறது. ஹிஸ்புல்லாவுடனோ ஹமாஸுடனோ போரொன்று மூளும் பட்சத்தில், அல்லது இந்தியா தனது மூலோபாய எதிரியாகக் கருதும் சீனாவுக்கு இஸ்ரேல் தனது லாபத்துக்காக ஆயுதம் விற்பனை செய்யும் பட்சத்தில், மோடிக்கு இஸ்ரேல் தலையிடியாக மாறும். எதிராளியான காங்கிரஸ் கட்சியின் அரசாங்கம் பொதுவில் நட்புக் காட்டப் போவதில்லை.

சுற்றுலாத்துறை போன்ற தனிநபர் தொடர்புபடக்கூடிய ஒப்பந்தங்களை பலப்படுத்துவதில் இரு தரப்பும் ஈடுபட்டது ஏன் என்பதை இந்த அவதானங்கள் புரிய வைக்கும். இராணுவ உயர் அதிகாரிகளும் பிஜேபி அரசியல்வாதிகளும் இந்தியாவில் தாராளமாக இஸ்ரேலின் புகழை பரப்ப முடியும். ஏனென்றால், பெரும்பாலான இந்தியர்களுக்கு யூத நாட்டைப் பற்றி சிறிதளவு தான் தெரியும், அது அவர்களை விட்டும் வெகு தொலைவில் இருப்பதால்.

 

Advertisements