பாவம் அவர்கள்..! அதிஸ்டக்காரன் அவன்..!!

பாவம் அவர்கள்..! அதிஸ்டக்காரன் அவன்..!!

Eng Abdur Rahman (Courtesy Author)

Image result for BCAS Chairman Abdul Rahuman

வாழ்வாதாரம் இல்லாத அவர்களுக்கு தொழில் வாய்ப்பு தருவதாக அவன் சொன்னான் ..
ஆனால்,
தொழிலில்லாதிருந்த அவன் தொழிலதிபராக மாறினான்….!
வீடில்லாத அவர்களுக்கு வீடுகள் தருவதாக அவன் சொன்னான்..
ஆனால்,
சொந்த வீடில்லாதிருந்த அவன் ஆடம்பரமான பல வீடுகளுக்கு சொந்தக்காரனாக ஆனான்….!

Image result for plundering of tax payers money cartoon

Theme image googled and added by TW
ஏழை மாணவர்களுக்காக பாடசாலை கட்டித்தருவதாக அவன் சொன்னான்..
ஆனால்,
தனது பரம்பரைக்கே சொத்தாக கூடிய ஒரு பல்கலை கழகத்தையே அவன் கட்டிக்கொண்டான்….!
அகதிகளான அவர்களுக்கு புனர்வாழ்வு பெற்றுத்தருவதாக அவன் சொன்னான்…
ஆனால்,
அகதியாய் இருந்த அவனுக்கும் அவனின் குடும்பத்திற்கும் ஆடம்பரமான புதிய வாழ்வை அவன் பெற்றுக்கொண்டான்….!
போக்குவரத்து வசதிகளை அவர்களுக்கு பெற்றுத்தருவதாக அவன் சொன்னான்..
ஆனால்,
துவிச்சக்கர வண்டியை கூட சொந்தமாக கொண்டிராத அவன் பல ஆடம்பர வாகனங்களுக்கு சொந்தக்காரனாக மாறினான்….!
அவர்களின் காணிப்பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக அவன் சொன்னான்..
ஆனால்,
பிரச்சினைகளுக்குரிய காணிகளை கூட விற்று கோடி சம்பாதிக்கும் பெரும் காணி வியாபாரியாக அவன் மாறினான்….!
அவர்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதாக அவன் சொன்னான்..
ஆனால்,
அவனது பிள்ளைகள் சர்வதேச பாடசாலைகளிலும் வெளிநாட்டு பல்கலை கழகங்களிலும் படிப்பதற்கான வாய்ப்பை பெற்று கொண்டான்….!
முறையான அபிவிருத்திகளை அவர்களுக்கு பெற்று தருவதாக அவன் சொன்னான்..
ஆனால்,
அபிவிருத்தி வேலைகளில் கொள்ளையடிக்கும் மறைமுகமான கொந்தராத்து காரனாக அவனே மாறினான்…!
பாதுகாப்பை அவர்களுக்கு உத்தரவாதப்படுத்துவேன் என அவன் சொன்னான்…
ஆனால்,
அவனுக்கு மட்டுமன்றி, பள்ளிக்கு செல்லும் தன் பிள்ளைக்கும், சந்தைக்கு செல்லும் தன் மனைவிக்கும் அரசாங்க பாதுகாப்பை பெற்றுக்கொண்டான் …!
இழந்த கௌரவத்தை அவர்களுக்கு மீட்டுத் தருவதாக அவன் சொன்னான் ..
ஆனால்,
சாதாரண கௌரவ நிலையில் கூட இருந்திராத அவன் “வீ.ஐ.பி” யாக மாறினான்….!
அமானிதம் தவற மாட்டேன் என அவர்களிடம் அடித்துச் சொன்னான்..
ஆனால்,
அரசியல் பதவிகளுக்காக அல்லாஹ்வின் இல்லத்து அமானிதங்களை கூட அடகு வைத்தான்….!
அரசியல் போராட்டம் என்றும், அவர்கள் போராளிகள் என்றும் உசுப்பேத்தி அவர்களிடம் வேலை வாங்கினான்…
ஆனால்,
தேர்தல் செலவுக்காக கிடைத்த பணத்தைக் கூட தனது பங்காக்கி பதுக்கி கொண்டான்….!
அவர்களின் உரிமைகளுக்காக உரத்துப் பேசுவேன், போராடுவேன் என அவன் சொன்னான்..
ஆனால்,
பேச வேண்டிய தருணங்களில் மேலதிக கொடுப்பனவுகளையும், சலுகைகளையும் பெற்றுக்கொண்டு அடங்கிக்கிடந்தான்….!
மொத்தத்தில், அவனை நம்பிய மக்களாகிய ‘அவர்கள்’ எப்படியோயிருக்க,
அரசியல் வாதியாகிய ‘அவனே’ அத்தனையையும் பெற்றுக் கொண்டான்.
பாவம் ‘அவர்கள்’…!
அதிஸ்டசாலி “அவன்”…!!
அவர்களுக்கு பெற்றுத்தருவதாக சொல்லிய அனைத்தையுமே அவர்களை பயன்படுத்தியே தனக்காக பெற்றுக் கொண்டது மாத்திரம் அவனது அதிஸ்டமல்ல..
இத்தனை துரோகங்களை செய்த பின்னரும் இன்னமும் அவனை நம்பிக் கொண்டிருக்கும் அந்த ஏமாளி ‘மக்கள்’ தான் அவனுக்கு கிடைத்த மாபெரிய அதிஸ்டம்!!
Advertisements